ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் பயனில்லாமல் கிடக்கும் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்; எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுப்பாரா?

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக கட்டிடம் வீணாவதை தடுக்க எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்து மக்கள் சந்திப்பு நடத்துவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

Update: 2022-05-06 22:26 GMT
ஈரோடு
ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலக கட்டிடம் வீணாவதை தடுக்க எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுத்து மக்கள் சந்திப்பு நடத்துவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. 
தொகுதி அலுவலகம்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற எம்.எல்.ஏ.வுக்காக தொகுதி அலுவலக கட்டிடம் எஸ்.கே.சி. ரோட்டில் உள்ளது. இந்த கட்டிடம் ஈரோடு தொகுதி கிழக்கு மேற்கு என்று பிரிக்கப்படும் முன்பு ஈரோடு தொகுதிக்காக கட்டப்பட்டது. அப்போது ஈரோடு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்கள் வாங்குவது வழக்கம்.
ஈரோடு தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும் கைத்தறித்துறை அமைச்சராகவும் தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் என்.கே.கே.பி.ராஜா இருந்தபோது சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் எப்போதும் மக்கள் மனு கொடுக்கும் வகையில் ஆட்கள் நியமித்து இருந்தார். அவர் தொகுதியில் இருக்கும் நாட்களில் அலுவலகத்துக்கு வந்து மக்கள் சந்திப்பு நடத்தி வந்தார்.
மக்கள் சந்திப்பு
பின்னர் ஈரோடு தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டபோது இந்த அலுவலகம் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகமாக மாற்றப்பட்டது. அப்போது கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ.வான வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்றார். இவர் தற்போது தி.மு.க. துணை கொள்கை பரப்பு செயலாளராக உள்ளார்.
அவரும் தனது 5 ஆண்டுகள் பதவி காலத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மக்களை சந்திப்பதை வழக்கமாக வைத்து இருந்தார். அதுமட்டுமின்றி, அலுவலகத்தில் பணியாளர்களை நியமித்து, பொதுமக்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் அலுவலகத்துக்கு வந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுப்பாரா?
ஆனால் கடந்த முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அ.தி.மு.க. வை சேர்ந்த கே.எஸ்.தென்னரசு இந்த அலுவலகத்தை பயன்படுத்தாமல் முற்றிலுமாக புறக்கணித்தார். இதனால் கடந்த 5 ஆண்டுகளாக கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் பயன்படுத்தப்படாமல் கிடந்தது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக திருமகன் ஈவெரா தேர்ந்து எடுக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிந்து விட்டது. ஆனால், அவர் இதுவரை ஒரு முறை கூட தனது கிழக்கு தொகுதி அலுவலகத்துக்கு செல்லவில்லை. இதனால் இந்த அலுவலகம் பயனின்றி வீணாக கிடக்கிறது. எம்.எல்.ஏ. அவரது முகாம் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து வருகிறார். ஆனால், அவருக்கு என்று இருக்கும் அரசு அலுவலகத்துக்கு வந்து மக்களை சந்திப்பதும், மக்களின் கோரிக்கைகளை கேட்பதுமே சிறந்ததாக இருக்கும். மேலும், எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு வராமல் இருப்பதால் எம்.எல்.ஏ.வை சந்திக்க விரும்பும் பொதுமக்கள் யாராவது கட்சி பொறுப்பாளர்களை தேடி அலைந்து, அவர்களின் சிபாரிசின் பெயரால் மட்டுமே அவரை சந்திக்க முடியும் என்ற நிலையும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பொதுமக்கள் எம்.எல்.ஏ.வை எளிதில் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்வாரா? என்று ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்