ஈரோடு மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் 4 ஆண்டுகளில் 27 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கிராமப்புற பகுதிகளில் 27 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-05-06 22:26 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் கிராமப்புற பகுதிகளில் 27 ஆயிரம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்று ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனிநபர் கழிப்பறை
தமிழக மற்றும் மத்திய அரசின் சார்பில், ஊரக பகுதிகளில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், குறிப்பாக திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுக்க பொதுக்கழிப்பிட வளாகம் மற்றும் தனிநபர் இல்ல கழிப்பிடம் ஆகியவை கட்டிக்கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் தனிநபர் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டது.
இதன் மூலம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக ஈரோடு மாவட்டம் விளங்கி வருகின்றது. மாவட்டத்தில் உள்ள 225 ஊராட்களில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 935 தனி நபர் இல்லக்கழிப்பறைகள் கட்டப்பட்டன.
4 ஆண்டுகளில்...
மேலும் வீடு வீடாக சென்று தனிநபர் இல்லக்கழிப்பறைகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்து கழிப்பறைகள் இல்லாத வீடுகளுக்கு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.30.81 கோடி செலவில் 27 ஆயிரத்து 498 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் கழிப்பறை வசதி இல்லாத குடும்பங்கள் பயன்பெறும் வகையில், 31 ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டி செயல்பாட்டில் உள்ளதாகவும், 13 ஒருங்கிணைந்த சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு வருவதாகவும் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்