நீர் நிலைகளுக்கு பாதிப்பு இல்லாத குடியிருப்புகளை அகற்றக்கூடாது; கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மனு

நீர் நிலைகளுக்கு பாதிப்பு இல்லாத குடியிருப்புகளை அகற்றக்கூடாது என்று, கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.

Update: 2022-05-06 22:26 GMT
ஈரோடு
நீர் நிலைகளுக்கு பாதிப்பு இல்லாத குடியிருப்புகளை அகற்றக்கூடாது என்று, கலெக்டர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.
அகற்றக்கூடாது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமையில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு நிலங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது கோர்ட்டு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கோரி அரசு நிர்வாகம் குடியிருப்புகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளன. நில வகைப்பாட்டில் நீர் நிலை என வருவாய்த்துறை கணக்குகளில் இருக்கும். ஆனால், பெரும்பகுதி மக்களின் வசிப்பிடம் நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்ளன. இப்படிப்பட்ட குடியிருப்புகளை அகற்றக்கூடாது.
பட்டா வழங்க வேண்டும்
எனவே, அரசும், நீதித் துறையும் நீர் நிலைகளுக்கு பாதிப்பு உள்ளதா என ஆய்வுக்குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும். மேலும், நீர் நிலை ஆக்கிரமிப்பு என வருவாய்த்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ள பல பகுதிகளுக்கு பட்டா உள்ளது. எனவே, அந்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நோட்டீஸ்களை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் ஓடை என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ள பல பகுதிகள் பழைய கிராம கணக்குகளில், பூங்கா, இட்டேரி, வண்டிப்பாதை எனவும் பதிவாகி உள்ளது. எனவே, அதை வகை மாற்றம் செய்து பட்டா வழங்கவேண்டும். மேலும், மாவட்டத்தில், நீர் நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் உள்ள குடியிருப்புகளுக்கும் பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்