வேருடன் சாய்க்கப்பட்ட மரத்தில் வாசகம் எழுதி வைத்த பொதுமக்கள்

வேருடன் சாய்க்கப்பட்ட மரத்தில் வாசகம் எழுதி வைத்த பொதுமக்கள்

Update: 2022-05-06 22:26 GMT
ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்காக போடப்பட்ட சாலைகள் என்று குண்டும் குழியுமாக இருந்த பல்வேறு ரோடுகளில் தார் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி ஈரோடு திண்டல் சக்திநகர் 2-வது விநாயகர் கோவில் அருகில் 3-வது குறுக்கு சந்தில் 5-வது வீதி பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்தது. இங்கு ஒரு மரம் சாலை பணிக்கு இடையூறாக இருந்ததாக வேருடன் பெயர்க்கப்பட்டு உள்ளது. சாலையில் சாய்ந்து கிடந்த இந்த மரத்தின் மீது அந்த பகுதி மக்கள் ஒரு வாசகம் எழுதி வைத்து உள்ளனர். அதில், மனிதனை காப்பாற்ற பிறந்த நான் மனிதர்களால் கொல்லப்பட்டேன். இன்று எனக்கு ஏற்பட்ட இந்த நிலை என் இனத்திற்கு யாருக்கும் ஏற்படக்கூடாது. இது எனது கடைசி ஆசை என்றும் கண்ணீருடன் மரம் என்று எழுதப்பட்டு உள்ளது.
இந்த மரம் சாலை ஓரத்தில்தான் வளர்ந்து நின்றது. சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு இல்லை. மரத்தை வெட்ட வேண்டாம் என்று அந்த பகுதி மக்கள் கேட்டுக்கொண்டதாகவும், ரோடு அமைக்கும் பணியில் இருந்தவர்கள் மரத்தை சாய்த்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மேலும், இந்த மரத்தை அப்படியே நடவு செய்து காப்பாற்ற வேண்டும் என்று ஈரோடு சிறகுகள் அமைப்பினரும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வேருடன் சாய்க்கப்பட்ட மரத்தின் கடைசி ஆசை என்று மரத்தின் மனக்குமுறலாக எழுதி வைத்து மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்