புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை- சிமெண்டு ஓடுகள் பறந்து விழுந்தன

புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சிமெண்டு ஓடுகள் பறந்து விழுந்தன.

Update: 2022-05-06 22:27 GMT
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டாரத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.  அப்போது சிமெண்டு ஓடுகள் பறந்து விழுந்தன. 
பலத்த மழை
புஞ்சைபுளியம்பட்டி சுற்றுவட்டார பகுதியான புங்கம்பள்ளி, நல்லூர், காவிலிபாளையம் உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை 5 மணி வரை வெயில் அடித்தது. அதன்பின்னர் இரவு 7 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை நிற்காமல் கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. 
ஓடுகள் பறந்தன...
மேலும் புங்கம்பள்ளியில் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அதேபோல் சில வீடுகளில் ஓடுகள் சேதமடைந்தன. ரோட்டு ஓரம் நின்றிருந்து சிறிய மரங்களும் பல இடங்களில் முறிந்தன. 
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியில் சம்பத்குமார் (வயது 45) என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வீட்டின் கூரையில் பதிக்கப்பட்டு இருந்த சிமெண்டு ஓடுகள் தூக்கி வீசப்பட்டு பறந்து விழுந்தன. நல்ல வேளையாக யார் மீதும் ஓடுகள் படாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்