கொலை வழக்கில் திருப்பம்: குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது அம்பலம்
செங்கல் தொழிற்சாலை உரிமையாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம், குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.;
சாவு
செங்கல்பட்டு மாவட்டம், குன்னவாக்கம் ஊராட்சி, பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மனோகர் (வயது 47). இவர் வீட்டின் அருகே சொந்தமாக சிமண்டு செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இவர் இரவு நேரங்களில் தொழிற்சாலையில் தங்குவது வழக்கம். அதேபோல் கடந்த 6-ந் தேதி தொழிற்சாலையில் தங்கியுள்ளார்.
பின்னர் அடுத்த நாள் காலை வீட்டுக்கு வராததால் அவரது தந்தை முத்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது முகத்தில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
பிரேத பரிசோதனை
இதனையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் அங்கு கிடந்த சிமண்டு கற்கள் மீது முகத்தின் தாடை மோதி பலத்த காயமடைந்து, ரத்த போக்கு அதிகமாக ஏற்பட்டு மனோகர் சம்பவயிடத்திலேயே உயரிழந்துள்ளார் என்று தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதனை தொடர்ந்து சந்தேகம் தீராத போலீசார் காது பகுதி அறுக்கப்பட்டு உள்ளது என்று டாக்டர்களிடம் கேட்டபோது அது விலங்குகள் தாக்கியது போல் தெரிகிறது என்று கூறியுள்ளனர்.
உடனே போலீசார் மனோகரன் வீட்டிற்கு போய் சோதனை செய்தனர். அப்போது அவர் வளர்த்த 2 நாய்குட்டிகளின் முகம் முழுவதும் ரத்தக்கரை படிந்திருந்தது. இதனால் இறந்துபோன மனோகரின் காதை அவரது நாய்குட்டிகள் தான் கடித்தது என்று போலீசார் விசாரனையில் உறுதிப்படுத்தினர்.