கோவை மத்திய சிறையை காரமடைக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

கோவை மத்திய சிறையை காரமடைக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்;

Update:2022-05-09 20:45 IST
கோவை

கோவை மத்திய சிறையை காரமடைக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை மத்திய சிறை

கோவை மத்திய சிறை கடந்த 1872-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 165 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோவை மத்திய சிறையில் 2,134 கைதிகளை அடைக்க வசதிகள் உள்ளன. இங்கு தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

சிறை அதிகாரிகள், ஊழியர்கள் என 400-க்கும் மேற்பட்டோர்  பணியாற்றி வருகின்றனர். இந்த சிறை வளாகத்தில் 45 ஏக்கர் நிலம் 12 ஆண்டுகளுக்கு முன்பு செம்மொழி பூங்காவுக்கு ஒதுக்கப்பட்டது. 

மீதமுள்ள 120 ஏக்கர் நிலத்தில் தான் கைதிகளை அடைக்கும் சிறை கட்டிடங்கள், தொழிற் கூடங்கள் உள்ளன.

மாற்று இடம்

இந்த நிலையில் மத்திய சிறை அமைந்து உள்ள 165 ஏக்கர் நிலத்திலும் செம்மொழி பூங்கா அமைக்க அரசு திட்டமிட்டு உள்ளது. 

எனவே கோவை மத்திய சிறையை இடம்மாற்ற மாற்று இடம் தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதலில் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு அருகே அரசுக்கு சொந்தமான இடத்தை சிறைத்துறைக்கு ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதை ஏற்க சிறை நிர்வாகம் மறுத்தது. 

இதையடுத்து மருதமலை அருகே பாரதியார் பல்கலைக்கழகம் அமைந்து உள்ள பகுதியில் மத்திய சிறை அமைக்க இடம் ஒதுக்க சிறைத்துறை கேட்டுக்கொண்டது. 

அங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள் இருப்பதால் சிறை அமைக்க இயலாது என்று மாவட்ட நிர்வாகம் நிராகரித்தது.

 அரசுக்கு கருத்துரு 

எனவே தற்போது கோவை மத்திய சிறையை காரமடைக்கு இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. 

இதற்காக வரு வாய் துறை அதிகாரிகள் இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடு பட்டு வருகிறார்கள்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, கோவை மத்திய சிறைச்சாலை அமைந்து உள்ள பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. எனவே சிறை அமைக்க இடங்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. 

தற்போது காரமடை அருகே பெள்ளாதி பகுதியில் 95 ஏக்கர் பரப்பளவில் மத்திய சிறை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 

அதற்கான கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. என்றனர்.

மேலும் செய்திகள்