மின்வாரிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திட்டச்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-05-15 18:45 GMT
திட்டச்சேரி:-

திட்டச்சேரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மின்வாரிய அலுவலகம்

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல், பழமையான கட்டிடத்தில் மின்வாரிய அலுவலகம் இயங்கி வருகிறது. திட்டச்சேரியில் வீடுகள், கடைகள் என 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட இருமுனை, மும்முனை மின் இணைப்புகள் உள்ளன. ஆண்டுக்கு லட்சக்கணக்கில் மின்சாரத்துக்கு வருவாய் ஈட்டக்கூடிய பகுதியாக திட்டச்சேரி உள்ளது. 
திட்டச்சேரி மின் வாரிய அலுவலகத்தில் இரவு, பகல் என 24 மணி நேரமும் மின் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதனால் அலுவலகம் மின் ஊழியர்கள் தங்குவதற்கு ஏற்றதாகவும், மின் உபகரணங்களை பாதுகாக்கும் இடமாகவும் உள்ளது. இந்த நிலையில் அலுவலக கட்டிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதம் அடைந்து காணப்படுகிறது.  

அபாய நிலையில்...

எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் அலுவலக கட்டிடம் உள்ளது. மழைக்காலங்களில் நீர் கசிவதால் கணினி உள்ளிட்ட உபகரணங்களை அலுவலகத்தில் வைக்க முடியாத நிலையும் உள்ளது. இதனால் மின்கட்டணம் செலுத்துவதற்கு தனியார் கணினி மையங்களை நாடி செல்ல வேண்டி உள்ளதாகவும், அங்கு ரூ.10 முதல் ரூ.50 வரை கூடுதலாக பணம் வசூலிப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

புதிய கட்டிடம்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறுகிறார்கள். எனவே பழைய அலுவலக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு மின்வாரிய அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் செய்திகள்