பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நாகையில் இணையதள சேவை கோளாறு காரணமாக பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

Update: 2022-05-15 19:00 GMT
வெளிப்பாளையம்:-

நாகையில் இணையதள சேவை கோளாறு காரணமாக பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். 

இ-சேவை மையம்

நாகை பகுதியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட இடங்களில் இ-சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த இ-சேவை மையம் மூலம் இருப்பிடச்சான்று, வருமானச் சான்று, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்களை பொதுமக்கள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் இயங்கும் இ-சேவை மையங்களில் இணையதள சேவை (சர்வர்) கோளாறு காரணமாக பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம் செய்ய முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். 

ஒரு வாரத்துக்கும் மேலாக...

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இந்த நிலை நீடிப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் இணையதள கோளாறால் இ- சேவை மைய ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் நடக்கிறது. 
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இணையதள சேவை கோளாறை சரிசெய்து பட்டா மாற்றம், உட்பரிவு மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்