சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்தார்.;

Update:2022-05-17 13:04 IST
மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 27-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதற்காக கணினி அறை, தகவல் தொடர்பு சாதனங்களுடன் கூடிய அறை, சேர்மன் அறை, போட்டி ஒருங்கிணைப்பாளர் அறை என அனைத்து வசதிகளுடன் கூடிய தலைமை அலுவலகம் மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து போட்டி நடைபெறும் பூஞ்சேரியில் உள்ள அரங்கத்தை அமைச்சர் மெய்யநாதன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக்கு பின்னர் போட்டி ஏற்பாடுகளை ஜூலை 10-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதேபோல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுகுணாசிங், மாமல்லபுரம் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் செயலாளர் ஆனந்தகுமார், விளையாட்டு துறை செயலாளர் அபூர்வா, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தாசில்தார் சிவசங்கரன், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், தாசில்தார் சிவசங்கரன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் விசுவநாதன், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் மோகன்குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

மேலும் செய்திகள்