கோவில்பட்டி அருக மொபட் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி
கோவில்பட்டி அருக மொபட் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.;
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள சாலைப்புதூர் மஞ்சு நகரைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற சீனிவாசன் (வயது 56). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடம்பூரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர் நேற்று மதியம் அங்கிருந்து மொபட்டில் ஊர் திரும்பினார். அவருடன் மொபட்டில் விருதுநகர் மாவட்டம் ஏழயிரம்பண்ணை அருகே மடத்துப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் (52) என்பவரும் வந்தார்.
கோவில்பட்டி அருகே இடைசெவல் பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையில் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சுப்புராஜிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்- இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.