பெண்ணை தாக்கி விடுதி அறையில் வைத்து பூட்டிய கணவர் கைது

கோவையில் பெண்ணை தாக்கி, விடுதி அறையில் வைத்து பூட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட அந்த பெண் தனது பச்சிளம் குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து வீசி கொலை செய்தார் என கணவர் மீது பகீர் குற்றச்சாட்டு கூறினார்.

Update: 2022-05-18 16:19 GMT
கோவை

கோவையில் பெண்ணை தாக்கி, விடுதி அறையில் வைத்து பூட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட அந்த பெண் தனது பச்சிளம் குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து வீசி கொலை செய்தார் என கணவர் மீது பகீர் குற்றச்சாட்டு கூறினார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விடுதியில் சிறைப்பட்ட பெண்

கோவை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை நேற்று முன்தினம் இரவு ஒரு பெண் செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அதில் மிகுந்த பற்றத்துடன் பேசிய பெண், தன்னை கணவர் அடித்து, தாக்கி கோவை ராமநாதபுரம் விடுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி உள்ளதாகவும், தன்னை அவர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த விடுதி மற்றும் அறை எண் குறித்து கட்டுப்பாட்டு அறை போலீசாருக்கு அந்த பெண் தகவல் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீசார் கோவை ராமநாதபுரம் போலீசாரை தொடர்பு கொண்டு விடுதி அறையில் பெண் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது குறித்து தகவல்  தெரிவித்தனர். இதையடுத்து துரித கதியில் செயல்பட்ட போலீசார் அந்த விடுதிக்கு விரைந்து சென்றனர். 

பின்னர் மாற்றுச்சாவி மூலம் அறைக்கதவை திறந்து அந்த பெண்ணை மீட்டனர். அந்த பெண்ணின் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அந்த பெண்ணை கோவை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பகீர் தகவல்

அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த கவிதா (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசில் அளித்த பகீர் தகவல் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

நானும், கடையநல்லூரை சேர்ந்த மாரி செல்வம் என்கிற செல்வமும் (வயது 27) காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் காதலுக்கு செல்வம் வீட்டில் எதிர்ப்பு இருந்தது. இதன்காரணமாக எனது கணவருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நான் கர்ப்பம் அடைந்தேன்.

எனது கணவர் கோவையில் தான் கல்லூரி படிப்பு படித்தார். இதனால் அவருக்கு கோவை நன்றாக தெரியும். மேலும் எனது கணவர் அவரது பெற்றோருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக எனது பிரசவத்தை கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பார்க்க முடிவு செய்தார். 

இதையடுத்து கடந்த மாத இறுதியில் கடையநல்லூரில் இருந்து புறப்பட்டு ரெயில் மூலம் கோவைக்கு வந்தோம். பின்னர் பிரசவத்திற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன்.

பெண் குழந்தை பிறந்தது

கடந்த 3-ந் தேதி எனக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் சில நாட்கள் கழித்து நாங்கள் இருவரும் கடையநல்லூருக்கு ரெயிலில் புறப்பட்டு சென்றோம். இதனிடையே எனது கணவர் செல்வம், இந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி, என் நடத்தையின் மீது சந்தேகப்பட்டு சண்டை போட்டார். 

இந்த நிலையில் மீண்டும் எனது கணவருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் இருவரும், குழந்தையுடன் கடந்த சில நாட்களுக்கு முன் ரெயில் மூலம் கோவைக்கு புறப்பட்டு வந்தோம்.

ரெயில் மதுரை-திண்டுக்கல் இடையே வந்த போது எங்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் என் கையில் இருந்த குழந்தையை பிடுங்கி ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வெளியே வீசி கொலை செய்து விட்டார். 

இரவு நேரம் என்பதால் எந்த இடம் என்று தெரியவில்லை. மேலும் இதுகுறித்து வெளியே யாரிடமும் கூறக்கூடாது என்று என்னை மிரட்டினார் என்று தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து கோவை போலீசார் மதுரை மற்றும் திண்டுக்கல் போலீசாருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் கவிதா கூறியது உண்மைதானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இதனிடையே தப்பி ஓடிய செல்வத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கவிதா மயக்கம் அடைந்து விழுந்ததும் அவர் இறந்து விட்டதாக கருதி அறையை பூட்டி விட்டு தப்பியதாக தெரிவித்தார்.  செல்வத்தை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு ஓடும் ரெயிலில் இருந்து பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்