பாலக்கோடு அருகே சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு

பாலக்கோடு அருகே சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.

Update: 2022-05-18 16:19 GMT
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே சுற்றித்திரியும் சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
சிறுத்தை நடமாட்டம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் சிறுத்தை நடமாடி வருகிறது. இந்த சிறுத்தை இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து கோழிகளை கவ்வி செல்கிறது. இதனால் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து அதனை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வாழைத்தோட்டம் பகுதியில் மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது நள்ளிரவு அந்த சிறுத்தை கிராமத்திற்குள் வந்து கோழியை தூக்கி சென்றது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கினர். 
கண்காணிப்பு
இதுகுறித்து கிராமமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனவர் முனுசாமி தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் சிறுத்தை சுற்றித்திரியும் காவேரியப்பன் கொட்டாய், எருதுகுட்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகளில் உள்ள காப்புகாடுகளில் டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். 
ஆனால் சிறுத்தை தென்படாததால், பாறை இடுக்குகளில் பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தொடர்ந்து வனப்பகுதியை சுற்றிலும் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். ஆனால் சிறுத்தை வனத்துறையினர் கண்ணில் படாமல் சுற்றி வருகிறது.

மேலும் செய்திகள்