வியாபாரிக்கு தகவல் அளிக்காத அரசு அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

மைசூருவில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வியாபாரிக்கு தகவல் அளிக்காத அரசு அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தகவல் அறியும் உரிமை சட்ட ஆணைம் உத்தரவிட்டது.

Update: 2022-05-18 16:22 GMT

மைசூரு:

வியாபாரி

  மைசூரு மாவட்டம் உன்சூர் டவுன் முஸ்லிம் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் உபயதுல்லா. வியாபாரியான இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் உன்சூர் தாலுகா அலுவலகத்தில் சகாலா திட்டத்தின் கீழ் ஒரு தகவல் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.

   ஆனால் ஒரு மாதம் ஆன நிலையிலும் அவர் கேட்ட தகவலை தாலுகா அலுவலகம் கொடுக்கவில்லை. இதையடுத்து அவர் நேரடியாக தாலுகா அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்து கேட்டார்.

விண்ணப்பம் நிராகரிப்பு

  அப்போது அவர்கள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டதாக தெரிவித்து இருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி ஆன்லைன் மூலம் மாநில தகவல்அறியும் உரிமை சட்ட ஆணையத்திற்கு புகார் அனுப்பினார். அதன்பேரில் ஆணைய அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

  அப்போது வருவாய் பிரிவு அதிகாரி சித்தராஜு, உபயதுல்லாவுக்கு தகவல் அளிக்காமல், அவரது விண்ணப்பத்தை நிராகரித்திருந்தது தெரியவந்தது.

ரூ.10 ஆயிரம் அபராதம்

  இதையடுத்து அதிகாரி சித்தராஜுவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டனர். அந்த அபராத தொகையை மே மற்றும் ஜூன் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும்படியும் அரசுக்கு ஆணைய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்