அலங்கார மின் விளக்கு திடீரென்று தீப்பற்றி எரிந்தது

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அலங்கார மின் விளக்கு திடீரென்று தீப்பற்றி எரிந்தது. மின்கசிவு காரணமா? என்பது பற்றி அதிகாரி விசாரணை நடத்துகிறார்.

Update: 2022-05-18 16:43 GMT
மணவாளக்குறிச்சி:
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அலங்கார மின் விளக்கு திடீரென்று தீப்பற்றி எரிந்தது. மின்கசிவு காரணமா? என்பது பற்றி அதிகாரி விசாரணை நடத்துகிறார்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
தீ விபத்து
மண்டைக்காட்டில் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக பக்தர்கள் மட்டுமின்றி கேரளாவை சேர்ந்த பெண்கள் இருமுடி கட்டி வந்து வழிபடுவது வழக்கம். இதற்கு பெண்களின் சபரிமலை என்ற பெயரும் உண்டு. இந்த கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2-ந்ேததி கருவறையில் உள்ள கூரை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்து எரிந்த பகுதியை பழமை மாறாமல் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மண்டைக்காடு பகுதியில் லேசான மழை பெய்தது. அப்போது பகவதி அம்மன் கோவில் சுற்று சுவரில் அமைக்கப்பட்டு இருந்த அலங்கார மின் விளக்கு ஒன்று திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனே கோவில் மெயின் சுவிட்சை அணைத்தும், எரியும் தீயில் மண்ணை போட்டும் அணைத்தனர். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. 
மின் கசிவு காரணமா?
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் அலங்கார மின் விளக்கு தீப்பிடித்து எரிய மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்