நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவில் ஆண்களை மிஞ்சப்போகும் பெண்கள் ஆய்வில் தகவல்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 18 வயது நிரம்பிய ஆண்-பெண் இருபாலருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.

Update: 2019-03-24 21:05 GMT
புதுடெல்லி,

நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய 1952-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆண்களே அதிக அளவில் வாக்களித்து வந்தனர். எனினும் ஆண்டுகள் செல்ல செல்ல இந்த நிலைமை மாறி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் நடந்துள்ள தேர்தல்கள் குறித்து பிரபல எழுத்தாளர்களான பிரன்னாய் ராய், தொரப் சொபரிவாலா ஆகியோர் ஆய்வு செய்து புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இந்திய தேர்தலில் ஆண்-பெண் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்து பல்வேறு தகவல்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

அதன்படி கடந்த 1962 முதல் 2014-ம் ஆண்டு வரையிலான நாடாளுமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு 20 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், ஆண்களின் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. தற்போது ஆண்களும், பெண்களும் சமமான பங்களிப்பை வழங்கி வருவதாக கூறியுள்ள ஆசிரியர்கள், எனினும் சில சட்டசபை தேர்தல்களில் ஆண்களை விட பெண்களின் வாக்குப்பதிவு 1 சதவீதம் அளவுக்கு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இது வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என அந்த புத்தகம் கூறுகிறது. அந்தவகையில் வருகிற தேர்தல் இந்திய பெண்களின் தேர்தலாக இருக்கும் எனவும் புத்தக ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்