நாக்பூரில் இன்று வாக்கு செலுத்திய உலகின் மிக குள்ள பெண்

உலகின் மிக குள்ள பெண்ணான ஜோதி ஆம்கே நாக்பூரில் இன்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Update: 2019-04-11 11:00 GMT
நாக்பூர்,

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தொடங்கி அடுத்த மாதம் 19ந்தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில், உலகின் மிக குள்ள பெண்ணான ஜோதி ஆம்கே (வயது 25) நாக்பூரில் இன்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.  மொத்தம் 62.8 செ.மீ. உயரம் கொண்ட அவர், கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 16ந்தேதி தனது 18வது பிறந்த நாளை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.

இதன்பின் கடந்த 2012ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 6ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டபின் பிரபலம் அடைந்தார்.  வாக்கு சாவடிக்கு சென்ற உடனேயே அங்கிருந்த மக்கள் அடையாளம் கண்டு கொண்டு அவரை அன்புடன் வரவேற்றனர்.  வாக்கு சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

முதலில் வாக்களியுங்கள்.  அதன்பின் மற்ற விசயங்களை செய்து முடியுங்கள் என கூறினார்.  அவர் வாக்களித்த பின், தனது விரலில் மையிடப்பட்ட புகைப்படத்தினை முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

மேலும் செய்திகள்