'புஷ்பா' பட பாணியில் ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு வாகனத்தில் கடத்திய 169 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது

‘புஷ்பா’ பட பாணியில் ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய 169 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2022-07-24 17:03 GMT

பெங்களூரு:

கஞ்சா விற்பனை

பெங்களூரு தேவரசிக்கனஹள்ளி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த 15-ந் தேதி போதைப்பொருட்கள் விற்பனை செய்ய முயன்ற 3 பேரை பேகூரு போலீசார் கைது செய்திருந்தனர். அவர்கள் பெயர் அரவிந்த், பவன், அம்ஜத் என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரிடம் நடத்திய விசாரணையில், தங்களது கூட்டாளிகள் ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாகவும், அதனை பெங்களூருவில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, பேகூரு தனிப்படை போலீசார் எலெக்ட்ரானிக் சிட்டி அருகே நைஸ் ரோட்டில் அம்ஜத் கூறிய பகுதியில் கஞ்சா கடத்தி வருபவர்களை பிடிக்க காத்திருந்தனர்.

169 கிலோ கஞ்சா

அப்போது அங்கு வந்த ஒரு சரக்கு வாகனத்தை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினாா்கள். அந்த வாகனத்தில் சோதனை நடத்திய போது கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைக்கவில்லை. வாகனத்தில் இருந்த 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவா்கள் பெயர் பிரபு, பிரசாத் என்று தெரிந்தது. இவர்களில் பிரசாத்தின் சொந்த ஊர் ஆந்திரா என்பதும் தெரிந்தது.

போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அந்த வாகனத்தின் பின்பக்கம் இருக்கும் இரும்பு தகடுக்கு கீழே கஞ்சா பதுக்கி வைப்பதற்காக பெரிய பெட்டி போன்று தயாரித்து, அதற்குள் பதுக்கி வைத்திருப்பதாக 2 பேரும் தெரிவித்தனர். அதன்படி, இரும்பு தகட்டை அகற்றிய போது ஒரு பெட்டிக்குள் 169 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

புஷ்பா பட பாணியில்...

நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தில் செம்மரக்கட்டைகளை வாகனத்துக்கு அடியில் மறைத்து வைத்து கடத்துவதை பார்த்து, அதே பாணியில் ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பிரபு, பிரசாத், பிரசாத்தின் மனைவி சாய் சந்திரா, நஜீம் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 175 கிலோ கஞ்சா, சரக்கு வாகனம், ஆட்டோ உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்