வங்காளதேசத்தில் இந்து இளைஞர்கள் படுகொலை: அசாதுதீன் ஓவைசி கண்டனம்

வங்காளதேசத்துடனான உறவு வலுவாக இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாக அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-28 23:20 IST

கோப்புப்படம்

ஐதராபாத்,

வங்காளதேசத்தில் சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கவலை தெரிவித்தார். சிறுபான்மையினரின் பாதுகாப்பை வலியுறுத்தியும், பிராந்திய ஸ்திரத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியும் அவர் பேசினார்.

இது தொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “வங்காளதேசத்தில் முஸ்லிம் அல்லாத சிறுபான்மையின மக்கள் 2 கோடி பேர் வசித்து வருகின்றனர். இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே பதற்றம் அதிகரிக்காது என்று நான் நம்புகிறேன். திபு சந்திரதாஸ் மற்றும் அம்ரித் மண்டல் ஆகியோருக்கு எதிராக நடந்த துயர நிகழ்வுகள், வங்காள தேசத்தின் அரசியலமைப்புக்கு எதிரானது. வங்காள தேசத்தில் வசிக்கும் சிறுபான்மையின மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முகமது யூனுஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

வங்காளதேசத்துடனான உறவு வலுவாக இருப்பதை உறுதி செய்ய இந்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். வங்காள தேசத்தின் ஸ்திரத்தன்மை இந்தியாவின் பாதுகாப்புக்கு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வங்காள தேசத்தில் ஒரு புரட்சி நடந்துள்ளது. மேலும் பிப்ரவரி மாதம் வங்காள தேசத்தில் தேர்தல் நடக்கும் போது இரு நாடுகளுக்கு இடையே உறவு மேம்படும் என்று நம்புகிறேன். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, சீனா மற்றும் இந்தியாவிற்கு எதிரான சக்திகள் வங்காள தேசத்தில் இருக்கின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்