அண்ணனுடன் சண்டை: வீட்டை விட்டு வெளியேறிய 6 வயது சிறுவன் குளத்தில் சடலமாக மீட்பு
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் எர்மன்கோடு பகுதியை சேர்ந்தவர் முகமது அனீஸ். இவரது மனைவி துஹிடா. இந்த தம்பதிக்கு ரயன் , சுஹன் (வயது 6) என 2 மகன்கள் இருந்தனர். முகமது அனீஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். துஹிடா அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இதனிடையே, வீட்டில் நேற்று அண்ணன் தம்பியான ரயனும், சுஹனும் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். துஹிடா வெளியே சென்றுள்ளார். டிவி பார்ப்பதில் அண்ணன் தம்பி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அண்ணனுடன் சண்டையிட்ட சுஹன் அழுதுகொண்டே வீட்டை விட்டு வெளியேறியுள்ளான்.
இந்நிலையில், மாலை வீட்டிற்கு வந்த துஹிடா தனது மகன் ரயனிடம் தம்பி சுஹன் எங்கே என்று கேட்டுள்ளார். அப்போது, நடந்த விவரத்தை தாயாரிடம் சிறுவன் கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த துஹிடா வீட்டை சுற்றி தேடியுள்ளார். மேலும், சிறுவன் மாயமானது இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பல மணிநேர தேடுதலுக்குப்பின் சிறுவன் சுஹன் கிராமத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனுடன் சண்டையிட்டப்பின் சிறுவன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டானா? , வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.