தேசிய கீதத்தை தவறாக பாடிய காங்கிரசார்: சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ
கட்சித் தலைமையகத்தில் கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்பட்டது.;
திருவனந்தபுரம்,
காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் 140-ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று நாடெங்கிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (கேபிசிசி) சார்பில் திருவனந்தபுரத்திலுள்ள மாநில கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் நிறுவன நாள் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, தீபா தாஸ் முன்ஷி, பாலோடு ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கட்சித் தலைமையகத்தில் கொடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய கீதம் பாடப்பட்டது. அப்போது, ஒலிபெருக்கியில் தேசிய கீதத்தைப் பாடிய காங்கிரஸ் கட்சியைச் சேந்த பெண் நிர்வாகி ஒருவர், யாரும் எதிர்பாராதவிதமாக தேசிய கீதத்தை தவறாகப் பாடினார்.
அப்பாடலின் முதல் வரியைப் பிழையாக அவர் உச்சரிக்க அங்கு குழுமியிருந்த காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதைப் பொருட்படுத்தாமல் பின்னணியில் தொடர்ந்து பாடினர். இந்தக் காட்சி அங்கு எடுக்கப்பட்ட விடியோவில் பதிவாகி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு தர்ம சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.