பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளின் சம்பளத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்ற உத்தரவு ரத்து ஐகோர்ட்டு தீர்ப்பு

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளின் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யவேண்டும் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

Update: 2016-12-23 21:25 GMT
சென்னை,

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளின் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யவேண்டும் என்ற உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

இன்ஸ்டிடியூட் ஆப் தி பிரான்சிஸ்கன் மிஷினரி ஆப் மேரி என்ற அமைப்பின் தலைவர் தாமஸ் கான்வென்ட், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி செயலாளர் சகோதரி சூசன் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்தனர். அந்த வழக்கு மனுக்களில் கூறியிருப்பதாவது:-

இறைப்பணி

எங்கள் அமைப்பு கல்லூரிகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள் நடத்தி வருகின்றன. தரமான கல்வியை ஏழைகளுக்கு வழங்கி வருகிறோம். இந்த கல்வி நிறுவனங்களில் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் ஆகியோர் வாழ்நாள் முழுவதும் இறைப்பணிக்காக வாழ்பவர்கள். அவர்கள், தங்களது பெயரில் சொத்துகள் எதையும் வாங்க முடியாது.

வரி விலக்கு

அவர்களது சொத்துகள், உடைமைகள் எல்லாம் அவர்களுக்கு பின்னர் தானாக திருச்சபைக்கு சொந்தமாகி விடும். மேலும், இவர்கள் கல்வி சேவைப் பணியிலும் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம் முழுவதையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியாது. அது திருச்சபைக்கு வந்து விடும்.

இவற்றை கருத்தில் கொண்டு, ஊதியம் பெறும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகளுக்கு வருமான வரி விலக்கு அளித்து என்று 1944-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது. மேலும், இவர்களது சம்பளத்தில் வரி பிடித்தம் செய்யக்கூடாது என்று நேரடி வரி விதிப்பு மத்திய வாரியத்தின் செயலாளர் கடந்த 1977-ம் ஆண்டு சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

வரி பிடித்தம்

இந்த நிலையில், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கன்னியாஸ்திரிகளின் சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்வது குறித்து தெளிவுப்படுத்தும்படி வருமான வரித்துறை முதன்மை ஆணையருக்கு, சம்பளம் மற்றும் கணக்கு துறை அதிகாரி கடிதம் ஒன்றை கடந்த ஆண்டு செப்டம்பர் அனுப்பினார்.

இதற்கு பதிலளித்த வருமான வரித்துறை முதன்மை ஆணையர், வருமான வரி விலக்கு பெற்றவர்கள் குறித்து வருமான வரிச்சட்டம் பிரிவு 10-ல் கூறப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்கள் இல்லை. எனவே, அவர்களது சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.

சட்டவிரோதம்

இதன்படி சம்பளம் மற்றும் கணக்கு அதிகாரி, சம்பளத்தில் வருமான வரி பிடித்தம் செய்யவேண்டும் என்று அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சம்பளம் மற்றும் கணக்கு துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு சட்டவிரோதமாகும். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். மேலும், இவ்வாறு வருமான வரித்துறை முதன்மை ஆணையர் உத்தரவிடுவதற்கு முன்பு, 1944-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ,1977-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவில்லை.

எனவே, வருமான வரித்துறை முதன்மை ஆணையரின் இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

உத்தரவு ரத்து

இந்த மனுவை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘நேரடி வரிவிதிப்பு மத்திய வாரியத்தின் உத்தரவுக்கு, வருமான வரித்துறை முதன்மை ஆணையர் கட்டுப்பட்டவர் தான். எனவே, இந்த வாரியம் 1977-ம் ஆண்டு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை, முதன்மை ஆணையர் மதித்து செயல்படவேண்டும். ஆனால், சுற்றறிக்கைக்கு எதிராக அவர் உத்தரவை பிறப்பித்துள்ளதால், அவரது உத்தரவை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை. எனவே, வருமான வரித்துறை முதன்மை ஆணையரின் உத்தரவை ரத்து செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்