வேலை வாய்ப்பு மோசடி; மியான்மரில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் மீட்பு
விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.;
யாங்கோன்,
வெளிநாடுகளில் வேலை வாங்கி தருகிறோம் என கூறி இந்தியர்கள் 27 பேரை மியான்மர் நாட்டு எல்லை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இதன்பின்னர், அவர்களை உடல்ரீதியாக துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு மிரட்டல் விடுத்து, இணையதள மோசடிகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி ஸ்ரீகாகுளம் எம்.பி. மற்றும் விமான போக்குவரத்து துறை மந்திரி ராம் மோகன் நாயுடு, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, உடனடியாக அவர்களை மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டு கொண்டார்.
இந்த சம்பவம் தூதரக அதிகாரிகள் வழியே மத்திய வெளிவிவகார அமைச்சகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் அதிகாரிகள், மியான்மர் நாட்டின் யாங்கோன் நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். இதனை தொடர்ந்து நடந்த முயற்சியாக, 27 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.