பாஜகவின் சித்தாந்தம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல; நிதின் கட்காரி பேச்சு
பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் மட்டுமே எதிரானவர்கள் என்று நிதின் கட்காரி கூறினார்.;
நாக்பூர்,
மராட்டியத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வருகிற 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. தனது சொந்த ஊரான நாக்பூரில் நடைபெற்ற பா.ஜனதா பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசியதாவது:- பாஜக சித்தாந்தம் சாதி, மதம் மற்றும் மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் பணியாற்றுவதையே கற்றுக்கொடுக்கிறது. தான் ஒரு தீவிர பா.ஜனதா தொண்டனாக இருந்தாலும், தனக்கு வாக்களித்தவர்கள் மற்றும் வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் பொதுவான மக்கள் பிரதிநிதியாகவே பணியாற்றுகிறேன்.
பாஜக முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. நாங்கள் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் மட்டுமே எதிரானவர்கள். இந்த நாட்டிற்காக தியாகம் செய்யும் முஸ்லிம்கள், இந்துக்களை போலவே எங்களுக்கு அன்பானவர்கள். ஒருவர் மசூதி, குருத்வாரா அல்லது புத்த விகாருக்கு செல்லலாம். நாம் வழிபடும் இடங்கள் வேறாக இருக்கலாம், ஆனால் நம் அனைவரின் ரத்தமும் ஒன்றுதான், நாம் அனைவரும் பாரத தேசத்தவர்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் வன்முறை ஏற்படும் என்று சில எதிர்க்கட்சி தலைவர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.