ஹிஜாப் அணிந்த பெண்ணை முதலில் கட்சியின் தேசிய தலைவராக்கட்டும்: ஓவைசிக்கு பா.ஜ.க. பதிலடி

இந்தியாவில் உள்ள அரசியல் சாசனம், யார் வேண்டுமென்றாலும் அவர்கள் விரும்பும் வகையில் பதவிக்கு வருவதற்கான சுதந்திரம் வழங்கி உள்ளது என்று கூறினார்.;

Update:2026-01-11 09:54 IST

புதுடெல்லி,

மராட்டியத்தின் சோலாப்பூர் நகரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதுதீன் ஓவைசி பேசும்போது, இந்தியாவின் அரசியல் சாசனம் அனைத்து சமூக மக்களுக்கும் சம அந்தஸ்து வழங்குகிறது.

இந்தியாவில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் நாட்டின் பிரதமராக வருவார். அந்த நாள் வரும். அது என்னுடைய கனவும் கூட என்றார். இந்தியாவின் பிரதமராக, முதல்-மந்திரியாக அல்லது மேயராக இந்திய குடிமகன் யார் வேண்டுமென்றாலும் வரலாம் என்று பாபா சாஹிப்பின் அரசியல் சாசனம் தெரிவிக்கிறது என்றார்.

இதற்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி பா.ஜ.க.வின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஷாத் பூனாவல்லா இன்று கூறும்போது, அரசியல் சாசனம் யாரையும் தடுக்கவில்லை. பிரதமராக வேண்டும் என எல்லோரும் கனவு காணலாம். ஓவைசி இந்த நல்ல பணியை தன்னுடைய கட்சியில் இருந்து தொடங்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.

ஹிஜாப் அல்லது புர்கா அணியும் ஒரு பெண்ணை அவருடைய கட்சியின் தேசிய தலைவராக ஆக்க வேண்டும். அதனை அவர் செய்ய முடியாவிட்டால், விளிம்பு நிலையில் உள்ள இந்திய முஸ்லிம் ஒருவரை அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றார்.

கட்சியில் முஸ்லிமீன் என பெயரை சேர்த்து வைத்திருக்கும் நபர், மதசார்பின்மை பற்றி போதிக்க எந்த உரிமையும் கிடையாது என்று கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள அரசியல் சாசனம், யார் வேண்டுமென்றாலும் அவர்கள் விரும்பும் வகையில் பதவிக்கு வருவதற்கான சுதந்திரம் வழங்கி உள்ளது என்றும் அவர் கூறினார்.

இதேபோன்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் கூறும்போது, அரசியலமைப்பு சட்டப்படி, யார் வேண்டுமென்றாலும் இந்தியாவில் பிரதமராகலாம். அதில் எந்த தடையும் இல்லை.  ஆனால் இந்தியா ஒரு இந்து நாடு. இந்திய பிரதமர் எப்போதும் ஒரு இந்துவாகவே இருப்பார் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்