காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை பயங்கரவாத தளபதி சுட்டுக்கொலை போலீஸ்காரர் காயம்

காஷ்மீரின் பட்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட மச்சூ பகுதியில் ஸ்ரீநகர்–சரார் இ ஷெரீப் சாலையில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Update: 2017-01-06 22:15 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் பட்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட மச்சூ பகுதியில் ஸ்ரீநகர்–சரார் இ ஷெரீப் சாலையில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் காணப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவமும், மாநில போலீஸ் அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று அதிகாலையில் அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.

பாதுகாப்பு படையினர் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி முன்னேறிய போது, அங்கே பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒருவர் கையெறி குண்டு ஒன்றை வீசினார். அது வெடித்ததில் கோஷியார் சிங் என்ற போலீஸ்காரர் காயமடைந்தார். உடனே பாதுகாப்பு படையினர் பயங்கரவாதியை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனால் இரு பிரிவினருக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இறுதியில் அந்த பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களும், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கொல்லப்பட்ட பயங்கரவாதி குறித்து விசாரணை நடத்தியதில், அவர் பாரமுல்லா மாவட்டத்தின் சோபூரை சேர்ந்த முசாபர் அகமது நைக்கூ என்ற முசா மவுல்வி என தெரியவந்தது. லஷ்கர்–இ–தொய்பா இயக்கத்தின் தளபதியாக செயல்பட்டு வந்த இவரை, பல்வேறு தாக்குதல்கள் தொடர்பாக போலீசார் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்