ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு மன்னிப்பு கோருகின்றேன் - பொன் ராதாகிருஷ்ணன்

ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு மன்னிப்பு கோருகின்றேன் என்று மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் பேசிஉள்ளார்.

Update: 2017-01-13 16:20 GMT

சென்னை,

தமிழகத்தில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.

 காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் அவசர சட்டம் பிறப்பிக்குமாறு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் அரசுக்கு நெருக்கடி தரப்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. இதனையடுத்து கடைசி நேரத்தில் மாற்றம் நிகழலாம் என்ற நிலையில் மத்திய அரசு அவசர சட்டத்திற்கு பரிசீலனை செய்வதாக தகவல்கள் வெளியாகியது.

மன்னிப்பு

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாததற்கு மன்னிப்பு கோருகின்றேன் என்று மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் பேசிஉள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாததால் பொங்கல் விழாவை கொண்டாட மாட்டேன் என்றும் கூறிஉள்ளார்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாததற்கு காங்கிரஸ்தான் காரணம் என குற்றம் சாட்டிஉள்ளார். 

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என தமிழிசை நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 

காளைகளை காட்சி பட்டியலில் இணைத்ததால்தான் இவ்வளவு பிரச்சனையும், இன்று நாம் எதிர்க்கொள்ளும் அனைத்து பிரச்சனைகளுக்கும் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசே காரணம் எனவும் குற்றம் சாட்டினார். ஜல்லிக்கட்டுக்கு எதிராக திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகள், குறிப்பாக பிரதமர் மோடிக்கு எதிராக அவர்கள் பிரயோகித்த வார்த்தைகள் அனைத்தும் கீழ்தரமானவை, அதனை நான் எதிர்பார்க்கவில்லை, அதனை கண்டிக்கின்றேன் என்றும் தமிழிசை கூறிஉள்ளார். ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்