உத்தரபிரதேசத்தை தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க தயாராகும் பா.ஜனதா

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதீய ஜனதா தயாராகிறது.

Update: 2017-03-12 23:15 GMT

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தை தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதீய ஜனதா தயாராகிறது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் பாரதீய ஜனதா அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் குஜராத், இமாசல பிரதேசத்துக்கு தேர்தல் நடக்க உள்ளது. குஜராத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிறது. இமாசல பிரதேசத்தில் ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. குஜராத், பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் அங்கு பாரதீய ஜனதா வெற்றி பெறுவதில் பிரச்சினை இருக்காது என்றபோதிலும் கடந்த சில மாதங்களாக அந்த கட்சிக்கு பட்டேல் இனத்தவரால் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிக்கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதை பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷா நேர்த்தியாக செய்து விடுவார் என்ற நம்பிக்கை கட்சியில் நிலவுகிறது. இமாசல பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்துவதற்கு பாரதீய ஜனதா திட்டமிட்டு வருகிறது.

கர்நாடகம் அடுத்த இலக்கு

2019–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அடுத்த ஆண்டு நாகலாந்து, கர்நாடகம், மேகாலயா, திரிபுரா, மிசோரம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

இதில் பாரதீய ஜனதா கர்நாடக மாநிலத்தை அடுத்த இலக்காக கொண்டுள்ளது. தென் மாநிலங்களில் இங்கு மட்டும்தான் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலமும் 2008–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை பாரதீய ஜனதா ஆண்ட மாநிலம் தான். ஆனால் எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அந்த கட்சிக்கு கரும்புள்ளியாக அமைந்தது. 5 ஆண்டு கால பாரதீய ஜனதா ஆட்சியில் எடியூரப்பா, சதானந்த கவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் என 3 முதல்–மந்திரிகளை மக்கள் காண வேண்டி வந்தது.

அமித் ஷாவின் கணக்கு

இதன் காரணமாக மக்கள் 2013–ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்தினர். இப்போது முதல்–மந்திரி சித்தராமையாவின் ஆட்சியை அகற்றி விட்டு, எப்படியாவது மீண்டும் கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்து விட்டால் தென்மாநிலங்களில் கால் ஊன்றுவதற்கு வசதியாக இருக்கும் என்பது பாரதீய ஜனதா தலைவர் அமித் ஷாவின் கணக்கு.

ஊழல் வழக்கில் சிக்கி 2011–ம் ஆண்டு பதவியை இழந்த எடியூரப்பா, சி.பி.ஐ. கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். இது அவருக்கும், பாரதீய ஜனதாவுக்கும் சாதகமாக அமைந்துள்ளது. அவரும் கட்சியை அடிமட்ட அளவில் வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

அமித் ஷாவின் வியூகம், எடியூரப்பாவின் வசப்படுத்தும் திறன், விரைவில் பாரதீய ஜனதாவுக்கு வர இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணாவின் லிங்காயத்து சமூக ஓட்டு வங்கி மூன்றும் ஒன்று சேர்ந்தால் கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது பாரதீய ஜனதாவுக்கு கடினமான ஒன்றாக இருக்காது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்