அத்வானி ஜனாதிபதி ஆவதற்கு மேற்குவங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஜனாதிபதி ஆவதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

Update: 2017-03-26 04:11 GMT
கொல்கத்தா, 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை இறுதியில் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், பாரதீய ஜனதா சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்யவும், தேர்தல் குறித்து வியூகம் அமைக்கவும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இதையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அடுத்த வாரம் டெல்லியில் இரவு விருந்து அளிக்கிறார். 

இதில், கலந்து கொள்ளுமாறு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்று உத்தவ் தாக்கரே, இந்த விருந்தில் பங்கேற்பார் என்று சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பதவிக்கு பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இந்நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி ஜனாதிபதி ஆவதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்து உள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சி பங்கேற்று பேசிய மம்தா பானர்ஜி, அடுத்த ஜனாதிபதியாக அத்வானி தேர்வு செய்யப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியே. மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் போன்றோர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தனக்கு சம்மதமே என்று கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்