ஆர்.கே.நகர் தினகரன் பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் அணியினர் புகார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக, இந்திய தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் தரப்பினர் புகார்.

Update: 2017-03-28 07:26 GMT

சென்னை,

இடைத்தேர்தல் என்றாலே பணம்தான் என்று சொல்லும் அளவுக்கு ஓட்டுக்கள் விலை பேசப்படுவது தெரிந்ததுதான்.

பிரபலமாக பேசப்படும் திருமங்கலம் பார்முலாதான் பணவிநியோகத்தை பரவலாக்கியது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று விலை கூடுதலாகவே நிர்ணயிக்கப் பட்டு வருகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுப் பதும் குற்றம். வாங்குவதும் குற்றம் என்று தேர்தல் கமிஷன் சொல்லும் சட்டம் செல்லுபடியாவதில்லை.50 ஓட்டுக்கு ஒரு பொறுப் பாளரை நியமித்து தேர்தல் பணியை செய்யும் அரசியல் கட்சிகள் மிக எளிதாக பணத்தை விநியோகித்து விடுகின்றன. அதை தடுப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தேர்தல் கமிஷன் தனது இயலாமையை ஒத்துக் கொண் டுள்ளன.

ஒரே ஒரு தொகுதியில் நடக்கும் தேர்தலை கட்டுப் பாட்டுக்குள் வைத்து நடத்த முடியவில்லை என்றால் நிர்வாகம் செயலற்று போனதாகத்தான் மக்களால் கருதப்படும்.
ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் வீடு வீடாக கணக் கெடுக்கும் பணியை முடித்து விட்டனர். அவர்களில் எந்தெந்த கட்சியினர் எவ்வளவு பேர்? பணத்தால் எத்தனை பேரை மாற்ற முடியும்? என்ற கூடுதல் விபரங்களையும் சேகரித்து வைத்து இருக்கிறார்கள்.

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக ரூ.50 கோடி பணம் அரசியல் கட்சியினரிடம் தயாராக இருப்பதாக மாநில உளவுப் பிரிவு போலீசார் தகவல் அறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.குறைந்த பட்சம் 70 ஆயிரம் வாக்காளர்களை பணம் கொடுத்து வளைக்க முக்கியமான கட்சிகள் முடிவு செய்துள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் சார்பில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக, டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் மனோஜ்பாண்டியன் ஆகியோர் புகார் மனு அளித்தனர்

மேலும் செய்திகள்