300 தீவிரவாதிகள் வந்தனர், அவர்களில் அதிகமானோரை நாங்களும் சுட்டுவிட்டோம் - உயிர்பிழைத்த வீரர்

சுக்மாவில் 300 மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் வந்து தாக்குதல் நடத்தினர் என பாதிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரர் தெரிவித்து உள்ளார்.

Update: 2017-04-24 15:53 GMT
ராய்பூர்,

சத்தீஸ்காரில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  

மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட வீரர் சேர் முகமது பேசுகையில், “நாங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தீவிரவாதிகள் கிராம மக்களை அனுப்பினர், பின்னர் எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.  நாங்களும் பதிலடி தாக்குதல் கொடுத்தோம், அவர்களிலும் பலர் உயிரிழந்தனர். சுமார் 300 நக்சலைட் பயங்கரவாதிகள் அங்கிருந்தார்கள், நாங்கள் 150 பேர் இருந்தோம், நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தினோம். நான் 3, 4 நக்சலைட்களை சுட்டு வீழ்த்தினேன்,” என கூறிஉள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது. மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவும் ஒரு அதிபயங்கர தாக்குதல் ஆகும். 

தாக்குதல் நடத்தியதில் சில பெண் நக்சலைட்டுகளும் இருந்தனர். இதனால் நாங்கள் சிறிது நேரம் நிலைகுலைந்து போனோம். இதனால் எங்கள் தரப்பில் உயிர்ச்சேதம் அதிகம் ஏற்பட்டது என்றும் பாதிக்கப்பட்ட வீரர் தெரிவித்து உள்ளார். 
 
தாக்குதல் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், இதுவரை 26 வீரர்களின் உடல்களை மீட்டு உள்ளோம். மேலும் 8 வீரர்கள் வரை காணவில்லை. அவர்களை தேடி வருகிறோம். தாக்குதல் நடத்திய நக்சலைட்டுகள், ரிசர்வ் படை முகாமில் இருந்த ஆயுதங்களை கொள்ளை 

அடித்து சென்றார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம் என்றனர். இதே பகுதியில் மார்ச் மாதம் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் ரிசர்வ் படையினர் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்