இந்தியாவின் வர்த்தகத் தடைகளை நீக்க டிரம்பிடம் வற்புறுத்தல்

அமெரிக்காவிற்கு வருகைத்தரவுள்ள இந்தியப்பிரதமர் மோடியிடம் வர்த்தகத் தடைகளை நீக்க கோரிக்கை வைக்கும்படி அதிபர் டிரம்பிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரினர்.

Update: 2017-06-24 21:49 GMT
வாஷிங்டன்

அத்தடைகள் அமெரிக்க வர்த்தகத்தையும், தொழிலாளர்களையும் கடுமையாக பாதிக்கின்றன என்றனர் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள். ”இந்திய வர்த்தகர்கள் அமெரிக்க சந்தைகளின் பலன்களை முழுமையாக பெறும் போது இந்தியாவில் அத்தகைய தடைகள் நீக்கப்படவில்லை. அதே சமயம் இந்தியா பல புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க உற்பத்தியாளர்களை நோக்கி விதித்துள்ளது. இந்தியப் பிரதமர் மோடி நேரில் வருகையில் இது பற்றி பேசுவதற்கு சரியான சந்தர்ப்பம்” என்றனர் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

உலகவங்கி அளித்துள்ள அறிக்கை ஒன்றில் உலகிலுள்ள 190 நாடுகளில் இந்தியாவிற்கு 130 ஆவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியா முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இருநாட்டு வர்த்தகம் உச்சத்திலுள்ளது.

இருப்பினும் அமெரிக்காவின் மொத்த ஏற்றுமதியில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாகவும், மொத்த வெளிநாட்டு முதலீட்டில் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும் இந்தியா கொண்டுள்ளது. இந்தியா தனது வர்த்தக கட்டுப்பாடுகளை அமெரிக்க, ஐரோப்பிய தரத்திற்கு உயர்த்துமென்றால் அமெரிக்க ஏற்றுமதியும், முதலீடும் முறையே மூன்றில் இரு பங்கு, இரு மடங்கும் அதிகரிக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

முக்கியமாக காப்புரிமை சட்டங்கள் போன்றவற்றில் இந்தியா தனது சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமர் மோடியின் வருகை இது தொடர்பான விஷயங்களை விவாதிக்க பொருத்தமான நேரம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் செய்திகள்