ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு பீகாரில் ஆளும் கூட்டணியில் மோதல்

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளதால், பீகாரில் ஆளும் கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது.

Update: 2017-06-25 23:30 GMT

பாட்னா,

ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளதால், பீகாரில் ஆளும் கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது.

பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகியவை மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்டு, வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பீகார் கவர்னராக இருந்த பாரதீய ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளமோ காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீரா குமாரை ஆதரிக்கிறது.

ராம்நாத் கோவிந்துக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு தெரிவித்திருப்பது வரலாற்றுப்பிழை என்று லாலு பிரசாத் விமர்சித்தார்.

இந்த நிலையில், அவரது மகனும், பீகார் துணை முதல்–மந்திரியுமான தேஜஸ்வி யாதவ், ‘‘ஜனாதிபதி தேர்தலில் வெற்றி அல்லது தோல்வியை கருத்தில் கொண்டு ராஷ்ட்ரீய ஜனதாதளம் அதன் கொள்கைகளில் சமசரம் செய்து கொள்ளவில்லை’’ என்று கூறினார்.

மேலும், ‘‘களத்தில் குதிப்பதற்கு முன்னே தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது, வெற்றி பெறுவதற்காகத்தான் எதிர்க்கட்சிகள் வேட்பாளரை களம் இறக்கி உள்ளன’’ என்றும் அவர் தெரிவித்தார்.

இது முதல்–மந்திரி நிதிஷ் குமார் மீதான தாக்குதலாக அரசியல் அரங்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதாதள மாநில தலைவர் வசிஷ்ட நாராயண் சிங், பாட்னாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘அதிகாரத்தில் இருந்து கொண்டு அவர் (தேஜஸ்வி யாதவ்) இப்படி முதல்–மந்திரியை தாக்கும் விதத்தில் கூறி இருப்பது எதிர்பாராதது. எங்கள் கட்சிக்கு யாரும் உத்தரவிட முடியாது. மெகா கூட்டணியில் ஒரு கூட்டாளியாக இருக்கிறபோது, கூட்டணி தர்மத்தை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார்.

ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘‘முதல்–மந்திரி மீது வெறுப்பு ஏற்படுத்துகிற வகையில், தனது கட்சி தலைவர்கள் இப்படி கருத்து கூறுவதை லாலு பிரசாத் தடுத்து நிறுத்த வேண்டும். ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும் வளையல்களை அணிந்து கொண்டிருக்கவில்லை’’ என சாடினார்.

அத்துடன், ‘‘நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்துத்தான் மக்கள் ஓட்டு போட்டார்கள்’’ என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, ‘‘முதல்–மந்திரி நிதிஷ்குமார் மீது ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் ரகுவன்ஷ் பிரசாத்சிங், பாய் பீரேந்திரா எம்.எல்.ஏ., ஆகியோர் விமர்சனங்கள் செய்திருப்பது, லாலு பிரசாத்தால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது’’ என்றும் கூறினார்.

மேலும் செய்திகள்