உடலில் பட்டை, நாமத்துடன் டெல்லியில் ஊர்வலமாக சென்ற விவசாயிகள்

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 12–வது நாளாக போராட்டம் நடத்தினர்.

Update: 2017-07-27 23:15 GMT

புதுடெல்லி,

டெல்லியில் தமிழக விவசாயிகள் நேற்று 12–வது நாளாக போராட்டம் நடத்தினர். அவர்கள் தங்களது உடலில் பட்டை, நாமம் போட்டுக்கொண்டு ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி, விளை பொருட்களுக்கு லாபகரமான விலை, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 2–ம் கட்ட போராட்டம் நடந்து வருகிறது.

முதல் கட்ட போராட்டத்தைப் போலவே 2–ம் கட்ட போராட்டத்தையும் விவசாயிகள் நூதனமுறையில் நடத்தி வருகிறார்கள்.

வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் சிலரின் மண்டை ஓடுகளை எடுத்து வந்து போராட்ட களத்தில் வைத்துள்ளனர்.

இந்த போராட்டம் நேற்று 12–வது நாளை எட்டியது. நேற்றைய போராட்டத்தில் விவசாயிகள் தங்களது நெற்றி மற்றும் உடலில் பட்டை, நாமம் போட்டுக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் போட்டவாறே ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது ரோட்டின் குறுக்கே போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலி மீது சில விவசாயிகள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்தனர்.

இதற்கிடையே, போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு, தனக்கு பா.ஜனதா பிரமுகர்களிடம் இருந்து மீண்டும் கொலை மிரட்டல் வருவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக போலீசார் அவரிடம் பதில் கூறினர்.

மேலும் செய்திகள்