அமேதியில் அகல்தாத் விரைவு ரயிலில் வெடிகுண்டு கண்டெடுப்பு
உத்தர பிரதேசத்தின் அமேதியில் அகல்தாத் விரைவு ரயிலில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.;

லக்னோ,
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து மேற்கு வங்காளம் மாநிலம் கொல்கத்தாவுக்கு அகல்தாத் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று நள்ளிரவு உத்தரபிரதேசம் மாநிலம் அமேதி அருகே சென்று கொண்டிருந்த போது கழிவறையில் டிபன் பாக்ஸ் வடிவிலான மர்மப்பொருள் இருந்துள்ளது.
இதனையடுத்து, பயணிகளின் தகவலையடுத்து ரெயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டு, வெடிகுண்டு இருந்த இரண்டு பெட்டிகள் தனியாக கழற்றி விடப்பட்ட பின்னர், ரெயில் புறப்பட்டுச் சென்றது. வெடிகுண்டுகளை பரிசோதித்த நிபுணர்கள் அதை செயலிழக்கச் செய்தனர். வெடிகுண்டு உடன் ஒரு கடிதமும் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
அந்தக்கடிதத்தில் காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி அபுவானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எழுதப்படிருந்தது. இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.