ஜார்கண்ட்: 3 மாதங்களில் மின்னல், பாம்பு கடியால் 431 பேர் பலி

இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது என பேரிடர் மேலாண் துறைக்கான மந்திரி கூறினார்.;

Update:2025-08-07 21:08 IST

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்குதல், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட பல்வேறு பேரிடர்களால் கடந்த மே 1 முதல் ஜூலை 31 வரையிலான 3 மாத காலகட்டத்தில் 431 பேர் பலியாகி உள்ளனர்.

இதுபற்றி பேரிடர் மேலாண் துறையின் செயலாளர் ராஜேஷ் குமார் சர்மா கூறும்போது, மின்னல் தாக்குதலில் 180 பேரும், நீரில் மூழ்கியதில் 161 பேரும் உயிரிழந்தனர். பாம்பு கடியால் 80 பேரும், கனமழையால் 9 பேரும் மற்றும் வெள்ளத்திற்கு ஒருவரும் உயிரிழந்து உள்ளனர்.

ஜார்கண்டில் கடந்த ஜூன் 17-ந்தேதி முதல் பெய்து வரும் கனமழையால், 467 வீடுகள் முற்றிலும் அழிந்து விட்டன. 8,187 வீடுகள் பகுதியளவு பாதிக்கப்பட்டு உள்ளன. 2,390 ஹெக்டேர் நில பரப்பிலான பயிர்களும் கனமழையால் பாதிப்படைந்தன. இதனை தொடர்ந்து பேரிடர் மேலாண் துறைக்கான மந்திரி இர்பான் அன்சாரி தலைமையிலான உயர்மட்ட கூட்டம் ஒன்றும் இன்று நடந்தது.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்