கேரளாவில் வைரஸ் காய்ச்சலுக்கு 22 லட்சம் பேர் பாதிப்பு, 420 பேர் உயிரிழப்பு
கேரளாவில் வைரஸ் காய்ச்சலுக்கு 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.;
திருவனந்தபுரம்,
ஜனவரியில் இருந்து வைரஸ் காய்ச்சலுக்கு கேரளாவில் 420 பேர் உயிரிழந்து உள்ளனர் என்று கேரள மாநில அரசு தெரிவித்து உள்ளது.
கேரள மாநில சட்டசபையில் பேசிய அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி கே.கே. சைலஜா, வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை தெரிவித்தார். 71 பேர் எச்1என்1 வைரஸ் காய்ச்சலுக்கும், 24 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் பலியாகி உள்ளனர் என்றார். வைரஸ் காய்ச்சல் தொடர்பாக கேரள சட்டசபையில் காங்கிரஸ் தலைமையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அப்போது சைலஜா பேசுகையில், பருவநிலை மாற்றம் மற்றும் எதிர்பார்க்காத வெப்பநிலை அளவில் மாறுபாடுகள் ஆகியவையே வைரஸ் காய்ச்சல் பரவலுக்கு காரணம் என குறிப்பிட்டு உள்ளார்.
“ஜனவரியில் இருந்து அரசு தகவல்களின்படி சுமார் 22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் காய்ச்சலுக்கு 420 பேர் பலியாகி உள்ளனர்.” வைரஸ் காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை மாநில அரசு எடுத்து வருகிறது என கூறினார் சைலஜா.
இருப்பினும் காங்கிரஸ் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் அரசு தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தார், வைரஸ் காய்ச்சலுக்கு 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளனர். 1000 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மாநிலத்தில் மோசமான நிலையானது உள்ளது, மருத்துவ நெருக்கடி அறிவிக்கப்பட வேண்டிய நிலையானது உள்ளது என்றனர்.
சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் இதுதொடர்பாக விவாதம் நடத்த அனுமதி மறுக்கவே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கேரளாவில் எச்1என்1, டெங்கு, எலி காய்ச்சல் மற்றும் காலரா பாதிப்பு உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக மழைக்காலங்களில் பரவிய குரங்கு காய்ச்சலானது இவ்வருடம் காணப்படவில்லை எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டது என குற்றம் சாட்டினார். இவ்விவகாரத்தில் தேவை ஏற்பட்டால் மத்திய அரசிடம் இருந்து மருத்துவ உதவியை மாநில அரசு பெற வேண்டும். நிலையானது மோசமாக உள்ளது, உடனடியாக மருத்துவ நெருக்கடியை மாநிலத்தில் பிரகடணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார் சென்னிதாலா.