மத்திய அரசுக்கு எதிராக சத்தியாகிரக போராட்டம்; கேரள முதல்-மந்திரி அறிவிப்பு

கேரள அரசை மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்க கூடிய வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என குற்றச்சாட்டாக கூறினார்.;

Update:2026-01-12 13:06 IST

திருவனந்தபுரம்,

மத்திய அரசுக்கு எதிராக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சத்தியாகிரக போராட்டம் ஒன்றை அறிவித்து உள்ளார். மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகள் மற்றும் கேரளாவுக்கு எதிராக நிதி பகிர்வில் தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டுவது ஆகியவற்றை குறிப்பிட்டு அவர் போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, கூட்டாட்சி கொள்கைகளை மூடி மறைத்து விட்டு, மாநில அரசின் அரசியல் சாசன உரிமைகளை மீறி, கடைசி நேரத்தில் கேரளாவுக்கான கடன் வாங்கும் வரம்பில் மத்திய அரசு வேற்றுமையுடன் செயல்பட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார்.

கேரளா எதிர்கொள்ளும் விசயம், ஒரு ஜனநாயக நாட்டில் ஒருபோதும் நடக்க கூடாத ஒன்று. அவர்கள் எங்களுடைய உரிமைகளை வேற்றுமையுணர்வுடன் பறித்து கொண்டுள்ளனர். இவை அரசியல் சாசன உரிமைகள். இந்த உரிமைகளை பாதுகாப்பதற்காக, நாங்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் என கூறினார்.

கேரளாவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடனுக்கான வரம்பில், நியாயமே இல்லாமல் ரூ.5,900 கோடிக்கான அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதுதவிர, மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தும்போது, முதலில் கேரளா உள்பட மாநில அரசு தன்னுடைய நிதியையே முதலில் செலவிடுகிறது என்றும் கூறினார்.

கேரள அரசை மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்க கூடிய வகையிலான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என குற்றச்சாட்டாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்