புதுச்சேரி சொகுசு விடுதி முன்பாக தினகரன் உருவ பொம்மை எரிப்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்

புதுச்சேரியில் டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள தனியார் சொகுசுவிடுதி முன்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-08-23 07:23 GMT
புதுச்சேரி,

 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை சின்ன வீராம்பட்டினம் வின்ட் பிளவர் ரிசார்ட் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம்சக்தி சேகர் புதுவை நகரில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் கார் கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தார்.

சின்ன வீராம்பட்டினத்தில் கார்களை நிறுத்தி விட்டு ஓட்டல் நோக்கி ஊர்வலமாக வந்தனர். தினகரனின் உருவபொம்மை ஒன்றையும் கையில் எடுத்து வந்தனர்.

தடுப்பு வேலி அருகே வந்ததும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அங்கு கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் தினகரன் உருவபொம்மையை அவர்கள் எரித்தார்கள். உடனே போலீசார் தண்ணீர் ஊற்றி அதை அணைத்தனர். 

இது குறித்து ஓம் சக்தி சேகர் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமாக உள்ள மன்னார்குடி குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் துணை போக கூடாது. இவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும். எம்.எல்.ஏ.க்களை இங்கே தங்க வைத்திருப்பதால் புதுவையில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது.

ஆனால், புதுவை காங்கிரஸ் அரசும், முதல்-அமைச்சர் நாரா யணசாமியும் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். தினகரனுக்கு உதவும் வகையில் எம்.எல். ஏ.க்களை இங்கு தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். புதுவை அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்