கருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள், வங்கி கணக்கு விபரத்துடன் பிரதமர் மோடிக்கு கடிதம்!

கருப்பு பணத்தில் எனக்கு ‘ஷேர்’ கொடுங்கள் என வங்கி கணக்கு விபரத்துடன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

Update: 2017-10-13 10:23 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவை சேர்ந்த விவசாயி ஒருவர் எனக்கு கருப்பு பணத்தில் ‘ஷேர்’ கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். 

கேரளா மாநிலம் வயநாடுவை சேர்ந்த விவசாயி கே சாது, கருப்பு பணம் வேட்டையாடப்பட்டதும் தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே, அதன்படி எனக்கு ஷேர் கொடுங்கள் என கடிதத்தில் கூறிஉள்ளார். என்னுடைய பயிர் சேதம் அடைந்ததற்கு இழப்பாக ரூ. 5 லட்சத்தை என்னுடைய கணக்கில் டெபாசிட் செய்யுங்கள் என வலியுறுத்தி உள்ளார் விவசாயி சாது. வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பணம் இந்தியாவிற்கு கொண்டுவரப்படும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என கூறியிருந்தீர்கள், அதன்படி கருப்பு பணத்தில் எனக்கான ஷேரை கொடுங்கள் என விவசாயி வலியுறுத்தி உள்ளார். 
 
“மூன்று வருடங்கள் ஆட்சியில் இருந்து உள்ளீர்கள், ஆனால் நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. விவசாய விலைப்பொருட்களின் விலை குறைவு, நுகர்வு பொருட்களில் விலை உயர்வு, ஆயில் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு சாதாரண மனிதனுக்கு பெரும் துயரமாக அமைந்து உள்ளது. எனவே உங்களுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக இப்போதைக்கு குறைந்த பட்சம் ரூ. 5 லட்சத்தை என்னுடைய கணக்கில் டெபாசிட் செய்யுங்கள்,” என கோரிக்கை விடுத்து உள்ளார் விவசாயி சாது.

விவசாயி சாது தன்னுடைய வங்கி கணக்கின் விபரங்களையும் பிரதமர் மோடிக்கு எழுதிஉள்ள கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

இதுதொடர்பாக விவசாயி பேசுகையில், பிரதமர் மோடியை மட்டும் குறிவைத்து இந்த கடிதத்தை எழுதவில்லை என கூறிஉள்ளார். 

“அரசியல் கட்சிகள் அவர்களுடைய தேர்தல் வாக்குறுதியில் இருந்து விலகி செல்கிறது. பொதுமக்கள் வேள்வியை எழுப்ப வேண்டும். இதுபோன்று பொதுமக்கள் அலட்சியம் காட்டுவது மிகவும் வேதனையளிக்கிறது. ஒட்டு மொத்த மக்களும் ஜிஎஸ்டி மற்றும் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக யாருமே எதிராக போராடவில்லை. இந்த அலட்சியம், பொதுமக்கள் மோடி போன்ற அரசியல்வாதிகளை ஏற்றுக் கொண்டனர் என்பதை காட்டுகிறது,” என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்