ஒகி புயலுக்கு பின்னர் 600-க்கும் அதிகமான மீனவர்களை காணவில்லை - மத்திய உள்துறை அமைச்சகம்

ஒகி புயலுக்கு பின்னர் 600-க்கும் அதிகமான மீனவர்களை காணவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2017-12-14 11:03 GMT

புதுடெல்லி,


தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடந்த 30-ந் தேதி தாக்கிய ‘ஒகி’ புயலால் பெருத்த சேதம் விளைந்தது. இந்த புயலில் சிக்கி கணிசமான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. குறிப்பாக இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மீனவர்களின் பிணங்களும் கரை ஒதுங்கி வருகிறது. இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை மாயமானவர்களை தேடும் பணியை தொடர்ந்து வருகிறது. பிற மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

இப்போது ஒகி புயலுக்கு பின்னர் 600-க்கும் அதிகமான மீனவர்களை காணவில்லை என மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி கூறிஉள்ளார். 

தமிழகத்தில் இருந்து 433 மீனவர்களையும், கேரளாவில் இருந்து 186 மீன்வர்களையும் இன்னும் கண்டுபிடிக்க வேண்டியது உள்ளது. ஒகி புயலுக்கு பின்னர் மாயமானவர்கள் குறித்து இரு மாநிலங்களும் இறுதி அறிக்கையை கொடுக்க வேண்டியது உள்ளது. வீடு வீடாக சென்று மாயமானவர்கள் தொடர்பாக பரிசோதனை செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முடிந்த பின்னர்தான் மாயமானவர்கள் தொடர்பான இறுதி தகவல் தெரியவரும் என உள்துறை அதிகாரி குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்