மராட்டிய முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை சிறுவன் நசுங்கி பலி

மராட்டிய முழு அடைப்பு போராட்டத்தில் போலீசாருடன் நடந்த வன்முறையில் 16 வயது சிறுவன் நசுங்கி பலியானான். #BhimaKoregaonViolence;

Update:2018-01-04 11:10 IST
மும்பை

மராட்டியத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பேஷ்வா படையினருக்கு இடையே நடந்த போரில் ஆங்கிலேய படை வென்றது. அவர்களின் படையில் தலித் (மகர்) பிரிவினரும் பங்கேற்று இருந்ததாக வரலாறு கூறுகிறது.

எனவே இந்த போர் வெற்றியை ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி மகர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி கடந்த 1-ந் தேதி புனேயின் பிமா-கோரேகானில் உள்ள போர் நினைவுச்சின்னம் நோக்கி லட்சக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.

இதற்கு மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு திடீரென பயங்கர வன்முறை வெடித்தது. வாகனங்கள், வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் ராகுல் என்ற வாலிபர் பலியானார்.

இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினை மாநிலம் முழுவதும் பூதாகரமாக வெடித்தது. வாலிபர் கொல்லப்பட்டதை கண்டித்து, மாநிலம் முழுவதும் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

பிமா-கோரேகான் வன்முறையை மாநில அரசு தடுக்க தவறிவிட்டதாக சட்டமேதை அம்பேத்கரின் பேரனும், பரிபா பகுஜன் மகாசங் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் குற்றம் சாட்டினார். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக மாநில அரசை கண்டித்து முழு அடைப்புக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.

இந்த போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன. பல இடங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை கொளுத்தி வன்முறையில் இறங்கினர்.

மும்பையில் பாந்திரா கலாநகர், தாராவி, காமராஜ் நகர், தின்தோஷி, ஹனுமான் நகர் உள்ளிட்ட இடங்களில் பஸ்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதில் 13 பஸ்கள் சேதம் அடைந்தன. 4 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

இதைப்போல பல இடங்களில் ரெயில் மறியல் போராட்டமும் நடந்தது. சில இடங்களில் ரெயில்கள் மீது கற்களும் வீசப்பட்டன. எனவே மின்சாரம் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

 வன்முறை சம்பவம் தொடர்பாக மும்பையில்  இதுவரை 200 பேர் பிடித்து விசாரிக்கபட்டு வருகின்றனர்.70 பேர் கைது  செய்யப்பட்டு உள்ளனர்.31 பேருக்கு எதிராக  வழக்குப்பதிவு செய்யபட்டு உள்ளது.

நந்தட் பகுதியில் நடந்த போரட்டத்தின் போது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போராட்டக்காரர்கள் ஓடியபோது யோகேஷ் யாதவ் என்ற  16 வயது சிறுவன் ஒருவன் நசுங்கி பலியானான்.

மேலும் செய்திகள்