சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

பந்தளத்தில் இருந்து திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது: சபரிமலையில் நாளை மகர ஜோதி தரிசனம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2018-01-12 22:45 GMT

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மகர ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி பந்தளம் கொட்டாரத்தில் இருந்து சுவாமிக்குரிய திருவாபரணங்களை ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 30–ந் தேதி நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் சுவாமிக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

மகர விளக்கு பூஜையின் போது சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்களை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி பந்தளம் கொட்டாரத்தில் நேற்று தொடங்கியது.

இதற்காக சுவாமியின் நகைகள் வைத்திருக்கும் பெட்டகங்கள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மதியம் 12 மணி அளவில் சபரிமலை நோக்கி திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது. இதையொட்டி வழிநெடுகிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

இந்த ஊர்வலம் சுவாமி அய்யப்பனின் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக நாளை மதியம் பம்பையை சென்றடைகிறது.

அங்கிருந்து, திருவாபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.20 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18–ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, 18–ம் படி வழியாக திருவாபரண பெட்டிகளை சன்னிதானத்துக்கு எடுத்துச் செல்வார்கள். அந்த ஆபரணங்கள் சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். அதைக் காணவும், அதைத் தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் மகர ஜோதியாக காட்சி தரும் சாமியை தரிசிக்கவும் ஏராளமான பக்தர்கள் குவிந்து இருப்பார்கள்.

மகர விளக்கு பூஜைக்கு முன்னதாக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மகர சங்ரம வழிபாடு நாளை மதியம் 1.47 மணிக்கு நடக்கிறது. சங்ரம சுப வேளையாக கருதப்படும் அந்த நேரத்தில், திருவிதாங்கூர் மன்னர் மாளிகையில் இருந்து கன்னி அய்யப்பன்மார்கள் புடைசூழ கொண்டு வரப்படும் நெய்யானது, சுவாமி அய்யப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம்.

நாளை திருவாபரண பெட்டிகள் கோவிலுக்கு கொண்டு வரும்போது, 18–ம் படி வழியாக செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும். அய்யப்பனுக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நிறைவடைந்த பிறகு இரவு 7 மணி அளவில்தான் பக்தர்கள் 18–ம் படியேற அனுமதிக்கப்படுவார்கள். இதே போல் திருவாபரணங்களை மலைக்கு கொண்டு வரும் போது, மதியம் முதல் இரவு 7 மணி வரை அய்யப்ப பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலையேறவும் தடை விதிக்கப்படும்.

சபரிமலையில் மகர விளக்கு, மகர ஜோதி தரிசனத்தையொட்டி இதுவரை காணாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்