கர்நாடகாவில் முதியவரிடம் பலத்தை காட்டும் போலீஸ் சாலையில் ஜோடியிடம் கும்பல் அட்டூழியம்!

கர்நாடகாவில் நடந்த இரு மனிதநேயமற்ற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #ShringeriSharadambaTemple #Karnataka

Update: 2018-01-16 10:08 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற சாரதாம்பா கோவிலில் முதியவர் ஒருவரை போலீசார் ஒருவர் சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்துவரும் சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. முதியவர் செய்வதறியாது கண்ணீர் விடும் காட்சி வீடியோவில் இடம்பெற்று உள்ளது. 

சம்பவம் நேற்று நடைபெற்று உள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடைபெற்ற போது தேவகவுடாவின் குடும்பத்தார் கோவிலுக்குள் இருந்தனர் என்றும் அதனால் பிற பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரியவந்து உள்ளது. 
முதியவர் கோவிலுக்குள் செல்ல முயற்சித்ததும் அவரிடம் போலீஸ் தன்னுடைய பலத்தை காட்டிஉள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ள பலர் கோவில்களில் விஐபி முறையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். விஐபிகளுக்காக 4 மணி நேரங்களுக்கு மேலாக நாங்கள் காத்திருக்கிறோம், ஆனால் எங்களை சாமியை பார்க்க ஒரு நிமிடம் கூட அனுமதிப்பது கிடையாது என பொதுமக்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோன்று பெங்களூருவில் கடந்த 31-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. சாலையில் கும்பலாக நிற்கும் சிலர் அவ்வழியாக சாலையில் மோட்டார் பைக்கிள் சென்ற ஜோடியை கொடூரமான முறையில் தாக்கும் சம்பவம் சிசிடிவி காட்சியில் இடம்பெற்று உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் ஒருவரை கைது செய்து உள்ளது. இவ்விரு சம்பவத்திற்கும் பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்