காய்ச்சலுக்காக போனவர் ஐ.சி.யூ. படுக்கையில் இருந்து விழுந்து உயிரிழப்பு

குர்காவனில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற சென்றவர் மருத்துவமனையின் ஐ.சி.யூ. படுக்கையில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். #Gurgaon;

Update:2018-01-21 07:29 IST

குர்காவன்,

குர்காவன் நகரை சேர்ந்தவர் ராம் பால் (வயது 55).  இவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவதற்காக மெட்ரோ மருத்துவமனைக்கு தனது மகன் சுகேந்திர குமார் உடன் சென்றுள்ளார்.  அங்கு மருத்துவர்கள் ராம்பாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து விட்டு அவரது மகனை வெளியில் இருக்க கூறியுள்ளனர்.

அதன்பின் 3 மணிநேரம் கழித்து, ராம்பாலின் நிலை தீவிரம் அடைந்து உள்ளது என மருத்துவர்கள் சுகேந்திரனிடம் கூறிவிட்டு அவரை ஐ.சி.யூ.வில் சேர்த்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஐ.சி.யூ.விற்குள் உறவினர் சந்தீப் உடன் சுகேந்திரன் சென்றுள்ளார்.  அங்கு தலையில் காயங்களுடன் மற்றும் ரத்தம் படிந்த நிலையில் படுக்கையில் ராம்பால் கிடந்துள்ளார்.

இதுபற்றி சுகேந்திரன் கேட்டதற்கு திருப்திகர பதிலை மருத்துவர்கள் அளிக்கவில்லை.  ராம்பாலிடம் அசைவில்லை.  அவர்களிடம் மருத்துவர்கள் கடுமையாக நடந்து கொண்டதுடன் தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ராம்பால் உயிரிழந்துள்ளார்.  ஆனால் மருத்துவர்கள் படுக்கையில் இருந்து அவர் தவறி விழுந்து விட்டார் என கூறியுள்ளனர்.  மருத்துவமனையின் அலட்சியத்தினால் ராம்பால் உயிரிழந்து உள்ளார் என குற்றம் சாட்டி சுகேந்திரன் மற்றும் கிராமத்தினர் மருத்துவமனை வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுபற்றி போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

#Gurgaon #hospital #ICU

மேலும் செய்திகள்