மன்மோகன் சிங் என்னைவிட சிறப்பான பிரதமராக இருப்பார் என எனக்கு தெரியும் சோனியா காந்தி

மன்மோகன் சிங் என்னைவிட சிறப்பான பிரதமராக இருப்பார் என எனக்கு தெரியும் என சோனியா காந்தி கூறிஉள்ளார். #SoniaGandhi

Update: 2018-03-09 10:54 GMT
மும்பை,

இந்தியா டுடே கன்கிளேவ் 2018-ல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 2004-ம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் தன்னுடைய தலைமை குறித்து பேசினார். என்னைவிட மன்மோகன் சிங் சிறப்பான பிரதமராக இருப்பார் என எனக்கு தெரியும், என்னுடைய வரம்புகள் என்னவென்று எனக்கு தெரியும் என்று குறிப்பிட்டார் சோனியா காந்தி. சோனியா காந்தி மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசை கடுமையாக தாக்கி பேசினார். ஆதார் திட்டம், மதவாத பதட்டம் மற்றும் கும்பல் தாக்குதல் விவகாரத்தில் பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார் சோனியா காந்தி.

தேசத்தில் ஒருவர் கருத்தை பிறர் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு சகிப்பின்மையானது வளர்ந்து வருகிறது. பாரதீய ஜனதா, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களிடையே பிரித்தாலும் சூழ்ச்சியை பயன்படுத்துகிறது. தேசம் மிகப்பெரிய வன்முறைகளுக்கு மத்தியில் பயணிக்கிறது. இப்போது மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நடத்திய அரசுபோன்று கிடையாது. இப்போதுள்ள பாரதீய ஜனதா அரசு பாராளுமன்ற விதிகள் மற்றும் செயல்முறைகளை மதிப்பது கிடையாது என்றார் சோனியா காந்தி. 

 மத்தியில் உள்ள பாரதீய ஜனதா பேச்சு சுதந்திரத்தை அனுமதிக்காமல் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குகிறது. இதனை செய்வதற்கு பதிலாக பாராளுமன்றத்தையே மூடிவிட்டு அனைவரும் வீட்டுக்கு செல்லலாம் என்றும் சோனியா காந்தி காட்டமாக பேசினார். 

மேலும் செய்திகள்