பலாத்கார வழக்கில் பணத்திற்காக வாக்குமூலத்தை மாற்ற கட்டாயப்படுத்திய பெற்றோர்கள்; சிறுமி போலீசில் புகார்
பலாத்கார வழக்கில் பணத்திற்காக வாக்குமூலத்தை மாற்ற கட்டாயப்படுத்திய பெற்றோர்களை பாதிக்கப்பட்ட சிறுமி காவல்நிலையம் இழுத்து சென்று உள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லி பிரேம் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆகஸ்ட் மாதம் இருநபர்களால் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியை வெவ்வேறு இடத்திற்கு அழைத்து சென்று உள்ளூர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் உள்பட இருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். பின்னர் ஒருவாரம் கழித்து சிறுமியை அவர்கள் விட்டுசென்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் தனக்கு நடந்ததை வாக்குமூலமாக அளித்தார். இதற்கிடையே குற்றவாளிகள் ஜாமீன் பெற்று வெளியே வந்தனர்.
வெளியே வந்தவர்கள் சிறுமி நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றம் செய்யும் முயற்சியை மேற்கொண்டனர். சிறுமியின் பெற்றோரை உறவினர்கள் மூலம் அவர்கள் நாடி உள்ளனர். ரூ. 20 லட்சம் கொடுப்பதாகவும், உங்களுடைய மகளை நீதிமன்றத்தில் வாக்குமூலத்தை மாற்றம் செய்ய உதவி செய்யுங்கள் என கேட்டுக்கொண்டு உள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்ட பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவர்கள் சிறுமியை கட்டாயப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உள்ளனர்.
முதல்கட்டமாக குற்றவாளிகள் தரப்பில் ரூ. 5 லட்சம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக சிறுமிக்கு தகவல் தெரியவந்து உள்ளது. பெற்றோர்கள் நீதிமன்றம் சென்ற போது கடந்த 10-ம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டில் இருந்த பணத்துடன் பிரேம் நபர் போலீசை நாடினார். பணத்தை எண்ணாமல் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நடந்ததை விவரித்து உள்ளார். இதனையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி சிறுமியின் தாயாரை கைது செய்து உள்ளனர். அவருடைய தந்தையை வலைவீசி தேடிவருகிறார்கள்.
பிற குற்றவாளிகளையும், சாட்சிகளையும் கலைக்க முயற்சி செய்ததாக அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு உதவியவர்களையும் போலீஸ் தேடிவருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார். சிறுமியின் பெற்றோர்களே அவரை கட்டாயப்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சிறுமியின் பெற்றோர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என துணை போலீஸ் கமிஷ்னர் எம் என் திவாரி கூறி உள்ளார்.