கதுவா வழக்கில் நியாயமான விசாரணையில் சிறிதளவு நேர்மை தவறினாலும் வழக்கு மாற்றப்படும் - சுப்ரீம் கோர்ட்டு

கதுவாவில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு விசாரணையில் நியாமான விசாரணைக்கு வாய்ப்பில்லை என்பதற்கு சிறிதளவு வாய்ப்பு இருந்தாலும் வழக்கு விசாரணை வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #Kathua case #Supreme Court

Update: 2018-04-26 10:48 GMT

புதுடெல்லி,
 

காஷ்மீர் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கதுவாவில் இருக்கும் பழங்குடியின இஸ்லாமியர்களை மிரட்டும் வகையில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்து உள்ளது. சிறுமிக்கு நிதி வேண்டும் என இந்தியா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மத்திய அரசு 12 வயதுக்கு குறைவான சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச்சட்டம் கொண்டு வந்தது. கதுவா சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீஸ், 3 போலீசார் உள்பட 8 பேரை கைதுசெய்தது.

இவ்வழக்கில் சிறப்பு விசாரணை குழு ஏற்கனவே குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துவிட்டது, குற்றப்பத்திரிக்கையில்தான் சிறுமிக்கு நடந்த கொடூரங்கள் வெளி உலகிற்கு தெரியவந்தது. ஜம்மு காஷ்மீர் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சி ராம், விஷால் மல்ஹோத்ரா ஆகிய இருவர் சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ விசாரணை கோரி மனுதாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் நாங்கள் தவறாக இணைக்கப்பட்டு உள்ளோம். நியாயமான, நேர்மையான விசாரணையை மேற்கொள்ள விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில், நேர்மையான விசாரணையை முன்னெடுக்க விசாரணையை சண்டிகாருக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டது. 
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தைக்காக ஆஜராகி வரும் பெண் வழக்கறிஞர் மீதே சக வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள் என்பதை சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்தார். 

 முன்னாள் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான இந்திய பார் கவுன்சில், இவ்வழக்கில் நீதி கிடைக்க சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என காஷ்மீரில் வழக்கறிஞர்கள் போராடுவது தொடர்பான இரகசிய அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

 இதுதொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.எம்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நடைபெற்றது. விசாரணையை அடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இந்த வழக்கு விசாரணையின் முக்கிய கவலையே நேர்மையாக நடக்குமா என்பதுதாகதான் உள்ளது என்றார். வழக்கில் நேர்மையாக விசாரணை நடந்து வந்தாலும் அதனை திசை திருப்ப இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. இவ்விவகாரத்தில் பார் கவுன்சில் என்ன சொல்கிறது என்ற விவகாரத்தில் செல்ல வேண்டாம், அதனை செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் நம்முடைய கவனத்தில் இருந்து விலகி சென்றுவிடுவார்கள். எங்களுடைய முதல் கவலை மற்றும் அரசியலமைப்பின் கவலையானது ஒரு நியாயமான விசாரணையை உறுதி செய்வது என்பதுதான்.

 நீதியில் எந்தஒரு தடையும் ஏற்படக்கூடாது என்பதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவருக்காக வாதிடும் வழக்கறிஞர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை அரசியல் சாசனம் உறுதியளிக்கிறது. இவ்வழக்கில் தேவை என்பது நேரிட்டால் இறுதியில் வழக்கு விசாரணையை மாற்றுவோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. வழக்கு விசாரணையில் நியாமான விசாரணைக்கு வாய்ப்பில்லை என்பதற்கு சிறிதளவு வாய்ப்பு இருப்பதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் எங்களை அணுகினாலும் வழக்கின் விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும் என்பதை அவர்களுக்கு உறுதியளிக்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார் தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வாதிடுகையில் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். விசாரணையின் துரிதம் மற்றும் விசாரணையின் முன்னேற்றத்தை பார்வையிட வாய்ப்பு உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு கூறியது.

மேலும் செய்திகள்