கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு; காங்கிரஸ் கண்டனம்

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் 20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. #PetrolPrice

Update: 2018-05-14 14:47 GMT


 புதுடெல்லி, 

பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்றவாறு மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அன்றாடம் உயர்த்தியும், குறைத்தும் வருகின்றன. கடைசியாக கடந்த மாதம் 24–ந்தேதி பெட்ரோல், டீசல் விலை மாற்றி அறிவிக்கப்பட்டது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சர்வதேச சந்தையில் எண்ணெயின் விலைக்கு ஏற்ப விலைமாற்றம் செய்யப்படவில்லை. கர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 20 நாட்களாக உயர்த்தவில்லை. 
  
கடந்த 12–ந்தேதி கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்த பின்னர் இன்று பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தி உள்ளன. டெல்லியில் பெட்ரோல் விலை 56 மாதங்களில் இல்லாத அளவிற்கும், டீசல் விலை இதுவரை எப்போதும் இல்லாத அளவிற்கும் உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது.

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில் ‘‘நாம் பழைய நிலைக்கு மீண்டும் செல்கிறோம். தற்போது கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டதால் டீசல், பெட்ரோல் மீது அதிக வரி விதிக்கப்பட்டு உள்ளது. நுகர்வோர் மீது சுமை ஏற்றப்பட்டு இருக்கிறது. கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு இடைவேளை விடப்பட்டு இருந்தது’’ என்று கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்