கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு, ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்கள் இருவரை பா.ஜனதா கடத்திவிட்டது - குமாரசாமி

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா கடத்திவிட்டது என குமாரசாமி குற்றம் சாட்டிஉள்ளார். #Kumaraswamy #BJP

Update: 2018-05-18 16:13 GMT


பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதாவுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 78 பேரும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு 38 உறுப்பினர்களும் உள்ளனர். சுயேச்சைகள் 2 பேரும் உள்ளனர். 

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடக சட்டசபையில் நாளை சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது.

பா.ஜனதாவுக்கு, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்தவர்களை வளைக்க முயற்சி செய்து வருகிறது. பெரும்பான்மை எண்ணிக்கையை பா.ஜனதா இதுவரை தொடவில்லை. இதற்கிடையே எங்களிடம் பெரும்பான்மை உள்ளது, நாங்கள் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுவோம் என பாரதீய ஜனதா தலைவர்க உறுதிபட கூறிவருகிறார்கள்.

பெங்களூருவில் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்காக நாங்கள் விடுதியில் உள்ளோம். எங்களுக்கு முழு மெஜாரிட்டி உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமான பெரும்பான்மை உள்ளது. எங்களுடைய தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் நாங்கள் எப்படி பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்? நாங்கள் சட்டசபையில் வாக்கெடுப்பில் 101 சதவிதம் வெற்றிபெறுவோம், என்றார். இதற்கிடையே பாரதீய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டது.

கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்றதில் இருந்து பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கிறது. காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் திடீர் கூட்டணி, பெரும்பான்மையில்லாத பா.ஜனதா ஆட்சி அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு என தொடர்ந்து செல்கிறது. இதற்கிடையே பா.ஜனதாவிடம் இருந்து எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் பணியை காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் மிகவும் கண்காணிப்புடன் செயல்படுத்தி வந்தது. இந்நிலையில் மற்றொரு பரபரப்பு சம்பவமாக குமாரசாமி இரண்டு எம்.எல்.ஏ.க்களை கடத்திவிட்டார்கள் என குற்றம் சாட்டி உள்ளார். 

“பாரதீய ஜனதாவினரால் எங்கள் கட்சியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டு உள்ளார்கள், அவர்கள் திரும்ப வருவார்கள்,” என நம்புகிறேன் என கூறிஉள்ளார் குமாரசாமி. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக குமாரசாமி குற்றம் சாட்டி உள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கு போதிய பலம் உள்ளது எனவும் குமாரசாமி குறிப்பிட்டு உள்ளார். 

மேலும் செய்திகள்